“இந்த மாதிரியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்கள்” - ஹர்திக் மீது கோபப்பட்ட ரசிகர்கள்

இந்திய அணியில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஜாகீர் கான்.

“இந்த மாதிரியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்கள்” - ஹர்திக் மீது கோபப்பட்ட ரசிகர்கள்

இந்திய அணியில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஜாகீர் கான்.  2003, 2011 உலகக் கோப்பை தொடர்களில் இவர் சிறப்பாக பங்களிப்பாற்றினார். டெஸ்ட் போட்டியில் 311, ஒருநாள் போட்டியில் 282 மற்றும் டி20 போட்டிகளில் 17 விக்கெட்களையும் சாய்த்தார். அதேபோல், ஐபிஎல் போட்டியிலும் 102 விக்கெட் சாய்த்தார்.

இந்நிலையில், ஜாகீர் கான் தன்னுடைய 41வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவும் தன்னுடைய பங்கிற்கு ட்விட்டரில் வாழ்த்தினார். ஆனால், கொஞ்சம் கிண்டலாக வாழ்த்திவிட்டார். ட்விட்டரில் ஜாகீர்கான் பந்துவீச்சில் தான் சிக்ஸர் அடித்த வீடியோ ஒன்றினை பதிவிட்டு, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாகீர்கான்.. இந்த ஷாட்டைப் போல் அதிரடியாக கொண்டாடுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார். 

ஹர்திக் பாண்ட்யாவின் இந்த கிண்டலான வாழ்த்து ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால், ஹர்திக் பாண்ட்யாவை கோபமாக திட்டித்தீர்த்துவிட்டனர். அதேபோல், ஜாகீர்கான் அடித்த சிக்ஸர்களையும் பலர் பதிவிட்டுள்ளனர்.