நள்ளிரவில் தாக்குதல்: ’36 வயதினிலே’ பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை!

எனக்கும் ரோஷன் ஆன்ட்ரூசுக்கும் பொதுவான பெண் நண்பர் உண்டு. அவருடன் பழகுவது...

நள்ளிரவில் தாக்குதல்: ’36 வயதினிலே’ பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை!

நள்ளிரவில் தயாரிப்பாளர் வீட்டுக்கு அடியாட்களுடன் சென்று தாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூவுக்கு கேரள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ். உதயனாணுதாரம், ’ஹவ் ஓல்ட் ஆர் யு’, ’காயங்குளம் கொச்சுண்ணி’, மும்பை போலீஸ் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் மஞ்சுவாரியர் நடிப்பில் மலையாளத்தில் இயக்கிய ’ஹவ் ஓல்ட் ஆர் யு’ படத்தை, தமிழில் ஜோதிகா நடிப்பில், ’36 வயதினிலே’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இவர் மலையாள பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி வீட்டுக்குள் அடியாட்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியதாக, எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் கூறப்பட்டது.

(ஆல்வின் ஆண்டனியுடன் ரோஷன்)

இதை ரோஷன் ஆன்ட்ரூஸ் மறுத்தார். அவர் கூறும்போது, ’தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனியின் மகன் ஜான் ஆண்டனி என்னிடம் உதவி இயக்குநராக இருந்தார். அவருக்கு போதை பழக்கம் இருந்தது. கண்டித்தும் கேட்கவில்லை. இதனால் அவரை நீக்கி விட்டேன். அதன்பிறகு என்னை  பற்றி அவர் பொய் தகவல்களை பரப்பி வந்தார். இதுகுறித்து கேட்பதற்காக நானும், எனது நண்பர் நவாசும் அவர் வீட்டுக்கு சென்றோம். அப்போது ஆல்வின் ஜான் ஆண்டனி, அவரது தந்தை, அவரது கூட்டாளிகள் சேர்ந்து என்னையும், நவாசையும் தாக்கினர். இதில் நவாசுக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன்’ என்றார்.

(36 வயதினிலே படப்பிடிப்பில்...)

இதுகுறித்து ஜான் ஆண்டனி கூறும்போது, ’நான் எனது தந்தையுடன் கொச்சி பனம்பிள்ளி நகரில் வசித்து வருகிறேன். வீட்டில் பெற்றோருடன் எனது 12 வயது தங்கையும் உள்ளார்.  கடந்த இரு தினங்களுக்கு முன் ரோஷன் ஆன்ட்ரூஸ் 40 அடியாட்களுடன் வந்து வீட்டுக்குள் புகுந்து தாக்கினார். எனது தாயை பிடித்து கீழே தள்ளினார். நான் போதைப் பொருள் பயன்படுத்துவதாக அவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. எனக்கும் ரோஷன் ஆன்ட்ரூசுக்கும் பொதுவான பெண் நண்பர் உண்டு. அவருடன் நான் பழகுவது அவருக்கு பிடிக்கவில்லை. என்னை பல முறை  எச்சரித்தார். தொடர்ந்து அவருடன் பழகினேன். இதை பொறுக்காமல் தான் எனது வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளார்’ என்றார்.

 

(ஜான் ஆண்டனி)

இதற்கிடையே இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூசுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் மற்றும் மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் நேற்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ராவிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர், ரோஷன் ஆண்ட்ருஸுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. அவரை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்கக் கூடாது என்றும் அப்படி தயாரித்தால், அதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

தயாரிப்பாளர்- பிரபல இயக்குனர் மோதலால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.