'தன்னை முடக்க நினைத்தவர்களை சைனி வீழ்த்தியுள்ளார்' - கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

'தன்னை முடக்க நினைத்தவர்களை சைனி வீழ்த்தியுள்ளார்' - கவுதம் கம்பீர்

நவ்தீப் சிங் சைனியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடக்க நினைத்த முன்னாள் இந்திய வீரர்களுக்கு கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி நேற்று அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் முதல் முறையாக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் நவதீப் சைனி தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அத்துடன் அவர் இந்தப் போட்டியில் மூன்று விக்கெட் எடுத்து இந்திய அணி வெற்றிப் பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

இந்நிலையில் நவதீப் சைனியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடக்க நினைத்த முன்னாள் இந்திய வீரர்களை கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார். இதுகுறித்த ட்வீட்டில், “நவ்தீப் சைனி இந்தியாவிற்காக விளையாடியதற்கு எனது வாழ்த்துகள். நீங்கள் போட்டியில் பந்துவீசுவதற்கு முன்பாகவே இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளீர்கள். அதாவது பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சௌகான் ஆகியோரை வீழ்த்தியுள்ளீர்கள். நவதீப் சைனியின் சிறப்பான ஆட்டத்தால் அவரை தடுக்க நினைத்தவர்களின் மிடில் ஸ்டெம்ப் சாய்ந்து கிடக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

ஏனென்றால் 2013ஆம் ஆண்டு டெல்லி அணியில் நவ்தீப் சைனியை சேர்ப்பதற்கு அப்போதைய டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் சேத்தன் சௌகான் மற்றும் தலைவர் பிஷன் சிங் பேடி ஆகியோரிடம் கம்பீர் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்பின்னரே சைனிக்கு டெல்லி அணியில் இடம் கிடைத்தது. இதேபோல கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நவ்தீப் சைனி இந்திய அணியில் இடம் பிடித்த போதும் பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சௌகான் ஆகியோரை கம்பீர் சாடினார். கடந்த 2017ஆம் ஆண்டு நவதீப் சைனி, “தனது கிரிக்கெட் விளையாட்டிற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கவுதம் கம்பீர்” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.