கலக்கினார் பும்ரா: 151 ரன்னுக்கு ஆஸி. ஆல் அவுட்!

பிட்ச்சின் தன்மை முற்றிலும் மாறியதால் அந்த அணி வீரர்களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. இதையடுத்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

கலக்கினார் பும்ரா: 151 ரன்னுக்கு ஆஸி. ஆல் அவுட்!

மெல்போர்னில் நடந்து வரும் 3 வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், பும்ராவின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி, 151 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா அபார சதம் அடித்தார். விராத் கோலி 82 ரன்களும் அறிமுக வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 76 ரன்களும் எடுத்தனர். ரோகித் சர்மா 63 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் ஹசல்வுட், லியான் தலா ஒரு விக்கெட் டை யும் கைப்பற்றினர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, இன்று ஆட்டத்தைத் தொடர்ந்தது. பிட்ச்சின் தன்மை முற்றிலும் மாறியதால் அந்த அணி வீரர் களால் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஹாரிஸும் கேப்டன் டிம் பெயினும் அதிகப்பட்சமாக தலா, 22 ரன் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதையடுத்து அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 151 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

இந்திய தரப்பில் பும்ரா, 6 விக்கெட் வீழ்த்தினார். மெல்போர்ன் மைதானத்தில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரின் சிறப்பான பந்துவீச்சு இது. அதோடு இந்த வருடத்தில் வெளிநாட்டில் அதிக விக்கெட் (45) வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றார். 

இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. விஹாரியும் மயங்க் அகர்வாலும் ஆடி வருகின்றனர். இப்போதையை நிலையில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.