"தோனியை 7ஆம் வீரராக களமிறக்கியது மிகப்பெரிய தவறு" முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனம்

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடின.

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அனுபவ வீரர் மகேந்திர சிங் தோனியை ஏழாவது இடத்தில் களமிறக்கியது மிகப் பெரிய தவறு என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர் தோனி ஏழாவது இடத்தில் களமிறங்கினார். இவருக்கு முன் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை அடுத்து தோனி களமிறங்கினார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின், லட்சுமண் மற்றும் கங்குலி கருத்து தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர், “இக்கட்டான சூழலில் அனுபவ வீரர் தோனியை முன்னதாக களமிறக்கியிருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவிற்கு முன்பாக தோனி களமிறங்கியிருக்க வேண்டும். அதேபோல தினேஷ் கார்த்திக் 5ஆவது இடத்தில் களமிறங்கியது என்னை பொருத்தவரை சரியான முடிவு இல்லை” எனத் தெரிவித்தார்.

விவிஎஸ் லட்சுமண், “தோனி ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் முன்னாள் களமிறங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் தோனி நான்கவது இடத்தில் களமிறங்கி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அதேபோல நேற்றும் அவர் முன்பே களமிறங்கியிருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி,“தோனி தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக இறங்கியிருந்தால், அவர் ரிஷப் பந்த்திற்கு உரிய ஆலோசனை வழங்கியிருப்பார். அத்துடன் அவரை நிதானமாக ஆட வலியுறுத்தியிருப்பார். மேலும் அவர் வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்கும் படி அறிவுரை வழங்கியிருந்திருப்பார். தோனி அந்த நேரத்தில் களத்தில் இருந்திருந்தால், விக்கெட் சரிவையும் தடுத்திருப்பார். அத்துடன் தோனி தனது அனுபவத்தை பயன்படுத்தி நிலைமையை அறிந்து விளையாடி இருப்பார். எனவே தோனியை ஏழாவது இடத்தில் களமிறக்கியது மிகப் பெரிய தவறு” எனத் தெரிவித்துள்ளார்.