இத்தனை நாள் ஏன் மயங்க் அகர்வால் காத்திருக்க நேர்ந்தது? - முன் நிற்கும் கேள்விகள்

ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகப்போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை மயங்க் அகர்வால் பெற்றுள்ளார். 

இத்தனை நாள் ஏன் மயங்க் அகர்வால் காத்திருக்க நேர்ந்தது? - முன் நிற்கும் கேள்விகள்

ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகப்போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை மயங்க் அகர்வால் பெற்றுள்ளார். 

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. இதனால், தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கு போட்டியாக இது உள்ளது. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், முரளி விஜய் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்தப் போட்டியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள விஹாரியும், அறிமுகப் போட்டியில் விளையாடும் மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

        

விஹாரி தனக்கு கிடைத்த வாய்ப்பினை 8 ரன்னில் அவுட் ஆகி தவறிவிட்டார். மயங்க் அகர்வால் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து அசத்தினார். அகர்வால் - புஜாரா ஜோடி மிகவும் நிதானமாக விளையாடி ஆஸ்திரேலிய வீரர்களின் பொறுமையை சோதித்தனர். அதிக இடைவெளியில் மட்டும் அவ்வவ்போது பவுண்டரிகளை அடித்தனர்.

             

அரைசதம் அடித்த நிலையில், 76 ரன்னில் அகர்வால் ஆட்டமிழ்ந்தார். அவர் ஒரு சிக்ஸரும் அடித்து இருந்தார். பின்னர், புஜாரா உடன் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். இந்த ஜோடி, அதிரடியாகவும் இல்லாமல், மிக நிதானமாகவும் இல்லாமல் சீராக ரன்களை சேர்த்தது. 

முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரன் ரேட் 2.41 மட்டுமே. புஜாரா 68 (200) ரன்களுடனும், விராட் கோலி 47 (107) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் கம்மிங்ஸ் இரண்டு விக்கெட்களையும் சாய்த்தார். ரகானே, பண்ட் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்திய அணி 400 ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. 

             

இதனிடையே, ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகப்போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை மயங்க் அகர்வால் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தத்து பத்கர் 51 ரன்கள் அடித்ததே அதிகமாக இருந்து வந்தது. 1947ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் பத்கர் இந்த ரன்களை அடித்து இருந்தார். 71 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மைல்களை முறியடித்து அகர்வால் 76 ரன்களை எடுத்துள்ளார். 

             

வெளிநாட்டு மண்ணில் அறிமுகப் போட்டியில் விளையாடிய வீரர்களில் இந்தியாவின் சுதிர் நாயக் 77 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் அகர்வால் இரண்டாவது இடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 1971இல் வெஸ்ட் இண்டீஸில் அறிமுகமான அவர் 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

            

முதல்தரப் போட்டியில் மிகவும் சிறப்பான பேட்டிங் செய்து வந்த மயங்க் அகர்வால், தற்போது சர்வதேச போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கடைசியாக அகர்வால் விளையாடிய 15 முதல் தரப்போட்டிகளில் 1516 ரன்கள் குவித்து இருந்தார். அதிகபட்சமாக 302 ரன்கள் சேர்த்துள்ளார்.

                     

2010 முதல் டி20 போட்டிகளிலும், 2013 முதன்முதல் தரப் போட்டிகளிலும் அவர் விளையாடி வருகின்றார். கடைசியாக ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.

          

தன்னுடைய முதல் சர்வதேசப் போட்டியை விளையாட அகர்வால் 27 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. இன்றையப் போட்டியில் அவரது சிறப்பான பேட்டிங்கை பார்த்த பலரும், இத்தனை நாள் ஏன் இவர் காத்து கொண்டிருக்க நேர்ந்தது என்று கேட்க தொடங்கியுள்ளனர்.