“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” -  மைக்கேல் வாகன் 

சிறந்த கேப்டன் தோனி தான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” -  மைக்கேல் வாகன் 

குறைந்த ஓவர் போட்டிக்கான சிறந்த கேப்டன் தோனி தான் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் தற்போது இருக்கும் சர்வதேச கிரிக்கெட் குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “மகேந்திர சிங் தோனி தற்போது கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இடுபடவில்லை. எனினும் எங்கள் காலத்தில் குறைந்த ஓவர் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியவர்களில் தோனி தான் மிகவும் சிறப்பானவர். 

ஏனென்றால் அவர் ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று ஃபீள்டர்களை மாற்றுவது, ஆட்டத்தின் போக்கை கணிப்பது ஆகியவற்றில் மிகவும் சிறந்த விளங்கினார். அதேபோல நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் அவர் மிகவும் வல்லவர். குறிப்பாக சில புதிய ஐடியாக்களை உபயோகப்படுத்துவதில் இவர் சிறப்பானவர்” எனத் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. உலகக் கோப்பை தொடருக்குப் பின் தோனி ஓய்வு பெற்று விடுவார் என்ற பல விமர்சனங்கள் வந்த நிலையில் மைக்கேல் வாகன் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். தோனியின் கேப்டன்ஷிப்பின் போது இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது.