90% படங்கள் தோல்வி: நஷ்டத்தில் தத்தளிக்கும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதத்தில் வெளியான 100-க்கும் அதிகமான திரைப்படங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் தோல்வி

90% படங்கள் தோல்வி: நஷ்டத்தில் தத்தளிக்கும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதத்தில் வெளியான 100-க்கும் அதிகமான திரைப்படங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும், இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் சினிமா துறையினர் கூறுகின்றனர். 

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ என இரண்டு படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தன.

‘பேட்ட’,‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் வருட தொடக்கத்திலேயே வெளியாகி வெற்றியடைந்ததால், 2019 தமிழ் சினிமாவிற்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்தனர். இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்தில் ‘சிம்பா’,‘சர்வம் தாளமயம்’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘தேவ்’, ‘எல்.கே.ஜி’, ‘காஞ்சனா-3’,‘என்.ஜி.கே’ என 104 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தப் படங்களில் 6 படங்களை தவிர, மற்ற அனைத்து திரைப்படங்களும் கடும் நஷ்டத்தை கொடுத்துள்ளன என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தாலும், ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு திரைடங்கள் வெளியாகின்றன. அந்தப் படங்களுக்கான தயாரிப்பு செலவும் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் சரியான திட்டமிடல் இல்லாததுதான் என்றும் அதை குறைத்தால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை குறைக்க முடியும் என்று கூறுகின்றனர்.

திட்டமிடல் போலவே, திரைப்படங்களின் கதையும், அதை சொல்லும் விதமும் ரசிகர்களை கவரும் வகையில் அமைக்க வேண்டும், அவ்வாறு செய்தால் வெற்றி நிச்சயம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்

கடந்த ஆறு மாதங்களில் மிகமிகக் குறைவான திரைப்படங்களே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்திருக்கும் நிலையில், அடுத்த ஆறு மாதத்தில் இன்னும் 100 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இதனால் வருடத்தின் இரண்டாவது பாதியாவது தங்களுக்கு வெற்றியை கொடுக்குமா என சினிமா துறையினர் எதிர்பார்க்கின்றனர்.