ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: புஜாரா அபார சதம்!

இது அவரது 17-வது டெஸ்ட் சதம் ஆகும். உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள்...

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: புஜாரா அபார சதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாளான இன்று புஜாரா அபார சதமடித்தார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ‘பாக்சிங் டே’   போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடர்ந்து சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர்கள் முரளிவிஜய், கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு,  ஹனுமா விஹாரியும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நிதானமாக ஆடிய விஹாரி, முதல் ரன்னை 25 வது பந்தில் எடுத்தார். மயங்க் அகர்வால் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடியை கம்மின்ஸ் பிரித்தார். விஹாரி, 66 பந்தில் 8 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அடுத்து புஜாரா வந்தார். நிலைத்து நின்று ஆடிய அகர்வால், தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் தேனீர் இடைவேளை க்கு முன், தனது விக்கெட்டை கம்மின்ஸ் பந்துவீச்சில் பறிகொடுத்தார். அவர் 161 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 76 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய அறிமுக வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அடுத்து கேப்டன் விராத் கோலி வந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய புஜாரா அரைசதத்தை கடந்தார். 83-வது ஓவரில் ஆஸ்திரே லிய வீரர்கள் புதிய பந்தை எடுத்தனர்.   47 ரன்கள் எடுத்திருந்த போது, மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் விராத் கோலி எளிதாக கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் வீணடித்தார்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் (200 பந்து, 6 பவுண்டரி), விராத் கோலி 47 ரன்களுடனும் (107 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம் இன்றுதொடர்ந்தது. நிதானமாக விளையாடிய புஜாரா சதம் அடித்தார். இதற்காக அவர் 280 பந்துகளை சந்தித்தார். இது அவரது 17-வது டெஸ்ட் சதம் ஆகும். உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 103 ரன்களுடனும் விராத் கோலி 69 (182 பந்து) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.