இயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தா‌ள் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ப‌ட்டுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ராஜராஜசோழன் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தா‌ள் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ப‌ட்டுள்ளது.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ரஞ்சித், தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மாமன்னர் ராஜராஜசோழனின் ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அவரது ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கியது என்ற குற்றச்சாட்டை ரஞ்சித் முன்வைத்திருந்தார். இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இயக்குநர் ரஞ்சித்தின் கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஞ்சித்தின் கருத்து குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையி‌ல், திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளார். 

1‌53, 153A ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலகத்தை ‌தூண்டும் வகையில் பேசுவது, சாதி, மதம், மொழி ரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசியது என இரண்டு பிரிவுகளில் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்துள்ளார். முன்னதாக ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் கும்பகோணம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.