பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.22) திறந்து வைத்தார். அப்பூங்காவில் இரண்டு நிறுவனங்களுக்கான தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் வடபகுதியிலுள்ள நகரங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.