பட்டாபிராமில் ரூ.330 கோடியில் பிரம்மாண்ட டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். 5.57 லட்சம் சதுர அடியில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. 6,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும், பசுமை கட்டிட வழிமுறைகளின்படியும் இந்த டைடல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். அந்த இலக்கை அடைவதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.