தீப ஒளி ஊக்கத்தொகையை இன்றைக்குள் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத் தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீப ஒளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
சென்னை: போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீப ஒளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீப ஒளி திருநாளையொட்டி 20% ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த 10ம் தேதி அறிவித்திருந்தார். அதன் பிறகு இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தீப ஒளி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது.