தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ.815.70 கோடி இழப்பு: சாம்சங் நிறுவனம் தகவல் @ உயர் நீதிமன்றம்
தொழிற்சங்கத்துக்கான தொழிலாளர்களின் போராட்டத்தால் தங்களுக்கு ரூ.815.70 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை: தொழிற்சங்கத்துக்கான தொழிலாளர்களின் போராட்டத்தால் தங்களுக்கு ரூ.815.70 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தின் இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் புதிதாக தொழிற்சங்கத்தை தொடங்கியுள்ளனர். அதைப் பதிவு செய்து தரக் கோரி தொழிற்சங்கங்களின் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிடக் கோரி அந்தச் சங்கத்தைச் சேர்ந்த எல்லன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சாம்சங் நிறுவனத்தின் பெயரை புதிய தொழிற்சங்கத்துக்கு பயன்படுத்தக் கூடாது என சாம்சங் நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், தங்களது தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்து கொடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.