பண மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்; மேலும் 50 பேருக்கு சம்மன்
பண மோசடி வழக்கின் விசாரணைக்காக சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
சென்னை: பண மோசடி வழக்கின் விசாரணைக்காக சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். இந்த வழக்கில் மேலும் 50 பேருக்கு சம்மன் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகள் பதிவு செய்தனர். சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.