மழைக்கால மின்தடையால் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை தேவை: பிரேமலதா விஜயகாந்த்

குறைந்த பணியாளர்களைக் கொண்டு இந்த வடகிழக்கு பருவ மழையை சரி செய்து சமாளித்து விடலாம் என அரசு எண்ணாமல், பொதுமக்கள் மின்தடையால் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமையாகும்

மழைக்கால மின்தடையால் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை தேவை: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: “குறைந்த பணியாளர்களைக் கொண்டு இந்த வடகிழக்கு பருவ மழையை சரி செய்து சமாளித்து விடலாம் என அரசு எண்ணாமல், கேங்மேன்களாக பணிபுரியக்கூடிய தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவித்து, ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற ஐந்தாயிரம் கேங்மேன்களையும் பணியில் அமர்த்தி, ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியக்கூடிய தொழிலாளர்களை வயர் மேன்களாகவும், கள உதவியாளராகவும் நியமனம் செய்து, உடனடியாக பொதுமக்கள் மின்தடையால் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமையாகும்,” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும், தொழிற்சாலையின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் மின்வாரியத்தில் 24 ஆயிரம் கள உதவியாளர்களும், 10 ஆயிரம் வயர் மேன்களுக்கான பணியிடங்களும் காலியாக உள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கும் இந்த நேரத்தில் மின்சார பிரச்சினைகள் உருவாகும். தொழிலாளர்களின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு வயர் மேன், கள உதவியாளர், கேங்மேன் ஆகிய மூவர்களின் மீது கூடுதல் பணி சுமை விழுகிறது.