காற்றழுத்த தாழ்வு பகுதி வலுக்கிறது: ஒடிசா – மேற்கு வங்கம் இடையே ‘டானா’ புயலாக நாளை கரையை கடக்கும்
அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை: அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுபெறக்கூடும். இது, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக். 24) காலைவடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும். வடக்கு ஒடிசா–மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக நாளை இரவு கரையை கடக்கக்கூடும். அப்போது, அந்த பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.