கிராம அளவில் கட்சியை மறுசீரமைக்க காங்கிரஸில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்

செல்வப்பெருந்தகையின் நோக்கத்தை நிறைவேற்ற, கிராம அளவிலான காங்கிரஸை முழுமையாக கட்டமைக்கும் பணி சேலம் மேற்கு மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டங்களில் தொடங்கப்பட்டது.

கிராம அளவில் கட்சியை மறுசீரமைக்க காங்கிரஸில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: கிராம அளவிலான காங்கிரஸை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு செயலாளர் செ.ராம்மோகன் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களுக்கும், காங்கிரஸுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து, காங்கிரஸின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளின் தேவைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராம வார்டுகள் முதல் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைக்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நமது இயக்கத்தை வலுப்படுத்துவது அவசியம். செல்வப்பெருந்தகையின் நோக்கத்தை நிறைவேற்ற, கிராம அளவிலான காங்கிரஸை முழுமையாக கட்டமைக்கும் பணி சேலம் மேற்கு மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. அதேபோன்று அடுத்த 15 நாட்களுக்குள் முழுநேர பணியாக மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு, கிராம அளவிலான காங்கிரஸை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.