கோவையில் 17.17 ஏக்கரில் ஐடி வளாகம், சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை மாநகரில் சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம்  செயல்படுத்தப்படும், அவிநாசி சாலை மேம்பாலம் மேலும் 5 கிலோ மீட்டருக்கு நீட்டிப்பு என்பது போன்ற அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.06) அறிவித்தார்.  

கோவையில் 17.17 ஏக்கரில் ஐடி வளாகம், சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: கோவை மாநகரில் சாலைகளை மேம்படுத்திட ரூ.200 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும், அவிநாசி சாலை மேம்பாலம் மேலும் 5 கிலோ மீட்டருக்கு நீட்டிப்பு, கோவை டைடல் பார்க் அருகிலேயே 17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

கோவை காந்திபுரத்தில், ரூ.300 கோடி மதிப்பில் புதிய நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுமானப் பணியை இன்று (நவ.06) தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், கோவைக்கான புதிய திட்டங்கள் குறித்து அறிவித்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியது: “கோவை டைடல் பார்க் அருகிலேயே, 17.17 ஏக்கர் பரப்பளவில், மேலும் ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும். கலைஞரால் சென்னையில் அமைக்கப்பட்ட ராமானுஜம் தகவல் தொழில்நுட்ப நகரத்தை போன்றே, கோவையில் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். சுமார் 36 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மூன்று மில்லியன் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள, இத்தகவல் தொழில்நுட்ப வளாகம் கோவை மாநகரின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக நிச்சயம் அமையும்.