சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை முதல் வானிலை முன்னெச்சரிக்கை வரை - ஒரு பார்வை
சென்னையில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய கனமழை விடாது பெய்து வருகிறது. இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.
சென்னை: சென்னையில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய கனமழை விடாது பெய்து வருகிறது. இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பு:
சென்னையில் விடாது பெய்யும் கனமழை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து, சென்னையில் நேற்றிரவு விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் காலையில் மீண்டும் மழை தொடங்கியது. அடையாறு, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சென்னையில் நேற்று இரவு பெய்த மழையில் 8 மரங்கள் சாய்ந்தன, அவை அனைத்தும் உடனே அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன.