வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய  வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு 

சென்னை: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை (அக்.25) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலாக வலுபெற்றது ‘டானா’ - சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (அக்.23) மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த டானா புயல், வடக்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இரவு 11.30 மணி அளவில் தீவிர புயலாக வலுபெற்றது. மேலும் இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.24) காலை 8.30 மணி அளவில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், பாரதீப்புக்கு (ஒடிசா) தென்கிழக்கே 210 கிலோமீட்டர் தொலைவிலும், தாமரா (ஒடிசா) தெற்கு- தென்கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்கம்) தெற்கே 310 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.