“கூட்டணிக் கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும்” - இபிஎஸ் விமர்சனம்
கூட்டணிக் கட்சிகள் கைவிட்டால், திமுக கீழே விழுந்துவிடும், என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மேட்டூர்: “கூட்டணி கட்சிகள் கைவிட்டால், திமுக கீழே விழுந்து விடும்.” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.22) நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: கட்டிடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் வலுவாக உள்ளதைப் போல அதிமுகவில் கிளைக் கழகம் வலுவாக உள்ளது. எடப்பாடியில் எதிரிகள் புறமுதுகைக் காட்டி ஓடிவிட்டனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவை தேர்தல் வேறு. அடுத்து வரும் ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும். மக்களுக்கு உண்மை செய்திகள் ஒருநாள் தெரிய வரும் போது திமுக காணாமல் போகும்.