கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில், 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.5) திறந்து வைத்தார்.
கோவை: கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில், 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.5) திறந்து வைத்தார். மேலும், இக்கட்டிடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். இதன்மூலம் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழலை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழகம் விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது.