சென்னை ‘ரெட் அலர்ட்’ விளக்கம் முதல் ஆந்திர கனமழை வரை - டாப் 10 விரைவுச் செய்திகள்

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் வியாழக்கிழமை அதிகாலை கரையை கடக்கக்கூடும்.

சென்னை ‘ரெட் அலர்ட்’ விளக்கம் முதல் ஆந்திர கனமழை வரை - டாப் 10 விரைவுச் செய்திகள்

தமிழகத்தில் எங்கெல்லாம் மிக கனமழை வாய்ப்பு? - தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் வியாழக்கிழமை அதிகாலை கரையை கடக்கக்கூடும். இதனால்,
வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வியாழக்கிழமை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ரெட் அலர்ட்’ ஏன்? - பாலச்சந்திரன் விளக்கம்: சென்னைக்கு விடுக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ குறித்து புதன்கிழமை விளக்கம் அளித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன், “காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், அனைத்து இடங்களிலும் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று அர்த்தமில்லை. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. காலை மற்றும் பகல் பொழுதுகளுக்கும் வானிலையில் வேறுபாடு இருக்கும். வியாழக்கிழமை காலை கரைக்கு அருகில் வருகிற போது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், ஏற்கெனவே பெய்து வரும் மழை பதிவுகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால், ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.