சென்னையில் 8 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடல்: 51 சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன
தண்ணீர் தேக்கம், வாகன நெரிசல் காரணமாக மேட்லி சுரங்கப்பாதை - கண்ணம்மாபேட்டை - முத்துரங்கன் சாலை - 17 அடி சாலை - அரங்கநாதன் சுரங்கப்பாதை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
சென்னை: சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்ததால், 8 சுரங்கப்பாதைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து போலீஸார் நேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
முதல் கட்டமாக மழைநீர் சூழ்ந்ததால் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம், சூரப்பட்டு அண்டர் பாஸ் ஆகிய 8 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.