தமிழகத்தில் நவ.1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் உறுதி

தென் தமிழகப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் நவ.1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் உறுதி

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நவ. 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன், 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: தென் தமிழகப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அக். 26-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல், மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி ஆகிய இடங்களில் 11 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மதுரை மாவட்டம் இடையப்பட்டி, உசிலம்பட்டியில் 9 செ.மீ., மதுரை மாவட்டம் சோழவந்தான், குப்பணம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.