“தமிழர்கள் எண்ணங்களில் 50 ஆண்டாக விஷம்...” - ‘இந்தி மாத’ நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்
“தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது,” என்று சென்னையில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை: “தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது,” என்று சென்னையில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். திராவிடக் கட்சிகளின் ஆட்சி மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு விவகாரத்தை முன்வைத்தே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி இன்று (அக்.18) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: “ஆயிரக்கணக்கான பள்ளிகள் மொழி சிறுபான்மையினரால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவ்வாறான பள்ளிகள் அமைந்துள்ள மாநிலங்களில் அம்மாநில அரசுகள், தங்களது மொழிகளை கற்பிக்க அனுமதியளிப்பதில்லை எனக் கூறி அப்பள்ளிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இறுதியில், மொழி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அவர்களுடைய மொழிகளை கற்பிப்பது, அவர்களுடைய அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.