திரை விமர்சனம்: அமரன்
சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவருடைய அம்மா கீதாவுக்கு (கீதா கைலாசம்) அதில் விருப்பமில்லை.
சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவருடைய அம்மா கீதாவுக்கு (கீதா கைலாசம்) அதில் விருப்பமில்லை. ஆனால் முகுந்துக்கு துணை நிற்கிறார், காதலி இந்து ரெபெக்கா (சாய் பல்லவி). ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் செல்லும் முகுந்த், கேப்டன், மேஜர் போன்ற உயர் பதவிகளை அடைகிறார். முகுந்துடனான காதலை இந்துவின் பெற்றோர் எதிர்க்க, அதைச் சமாளித்து அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் 44 படைக்குத் தலைவராக நியமிக்கப்படும் முகுந்த், தெற்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வீரமரணம் அடைவதுதான் படம்.
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. அறியப்பட்ட சம்பவங்களை வைத்து படங்கள் எடுக்கப்படும்போது கதை தெரியும் என்பதால் இறுதிவரை சுவாரஸியத்தைத் தக்கவைப்பது மிகப் பெரிய சவால். அதை அநாயாசமாகக் கையாண்டிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.