‘பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை தத்தளிப்பு’ - அரசு மீது இபிஎஸ் சரமாரி சாடல்
சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஸ்டாலினின் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: “சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஸ்டாலினின் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன என்பதையெல்லாம் இந்த அரசு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தாலும், தாழ்வான இடங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே உணவு வழங்க இயலும். எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வயிறார உண்பதற்கு வசதியாக, அதிமுக ஆட்சிக் காலங்களில் மேற்கொண்டது போல், அம்மா உணவகங்களில் மூன்று நேரமும் தரமான உணவை வழங்க உனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.