வேளச்சேரி மேம்பாலத்தில் அணிவகுத்து நிற்கும் கார்கள் - அபராதம் விதிப்பதாக அதிருப்தி

கடந்த 2015 பெருவெள்ளம்  மற்றும் கடந்தாண்டு பெய்த கனமழையில் கற்றுக்கொண்ட வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தி உள்ளனர்.

வேளச்சேரி மேம்பாலத்தில் அணிவகுத்து நிற்கும் கார்கள் - அபராதம் விதிப்பதாக அதிருப்தி

சென்னை: கடந்த 2015 பெருவெள்ளம் மற்றும் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் கற்றுக்கொண்ட வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார் உரிமையாளர்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மீது வரிசையாக நிறுத்தி உள்ளனர். போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களுக்காக, மேம்பாலத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து போலீஸார் ரூ.1000 அபராதம் விதிப்பதாக கார் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் வெள்ளம், புயல் அபாயத்தின்போது சென்னை நீருக்குள் மூழ்கி மீள்வது வழக்கம்.