அரசியல்வாதிகளில் ‘ஈகோ’ - ஆவடியில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத அம்மா திருமணம் மண்டபம்!
இந்த மண்டபத்தில் 75 நான்கு சக்கர வாகனங்களும், 100 இருசக்கர வாகனங்களும் நிறுத்தக்கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. மண்டபத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள், சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான வசதிகள் என தனியார் மண்டபத்தையே மிஞ்சும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் 2018-ம் ஆண்டு 29,497 சதுர அடி பரப்பளவில் திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 3 அடுக்குகள் கொண்ட இந்த மண்டபத்தின் முதல் தளத்தில் நவீன சமையலறை வசதியுடன் 400 பேர்உணவருந்தும் கூடமும், 2-ம் தளத்தில் 700 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மணமேடையும், 3-ம் தளத்தில் மணமகன், மணமகள் ஓய்வு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த மண்டபத்தில் 75 நான்கு சக்கர வாகனங்களும், 100 இருசக்கர வாகனங்களும் நிறுத்தக்கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. மண்டபத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள், சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான வசதிகள் என தனியார் மண்டபத்தையே மிஞ்சும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் நியாயமான கட்டணத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும், இந்த மண்டபம் ஆவடி ரயில், பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டுக்கு அருகில் இருப்பதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.