இந்தியன் 2 முதல் கங்குவா வரை: 2024-ல் ‘சோதித்த’ படங்கள்! | Year Ender 2024
எதிர்பார்ப்புகளை எகிற வைத்து ஏமாற்றம் கொடுக்கும் படங்கள் எல்லா வருடங்களும் டிசம்பர் மழையை போல தவறாமல் ஆஜராகத்தான் செய்கின்றன. ஆனால், பட ‘புரமோஷன்’ -ல் காட்டும் மெனக்கெடலையும், ‘சக்சஸ் மீட் பாஸ்’ நம்பிக்கையையும், திரைக்கதையில் காட்டியிருந்தால் நேரம் மிச்சம்; தாக்கம் நிச்சயம்.
எதிர்பார்ப்புகளை எகிற வைத்து ஏமாற்றம் கொடுக்கும் படங்கள் எல்லா வருடங்களும் டிசம்பர் மழையை போல தவறாமல் ஆஜராகத்தான் செய்கின்றன. ஆனால், பட ‘புரமோஷன்’களில் காட்டும் மெனக்கெடலையும், ‘சக்சஸ் மீட் பாஸ்’ நம்பிக்கையையும், திரைக்கதையில் காட்டியிருந்தால் நேரம் மிச்சம்; தாக்கம் நிச்சயம். இருபக்க கூர் தீட்டிய கத்தியான சமூக வலைதளங்கள் படத்தின் மொத்த ஹைப்பையும் முதல் ஷோவிலே காலி செய்துவிடுகின்றன. சிறப்பாக இருந்தால் அதுவே புரமோஷனாக மாறியும் விடுகிறது. அந்த வகையில் ‘ஓவர் ஹைப்’பால் சோதித்த படங்கள் குறித்து பார்ப்போம்.
லால் சலாம்: சமகால சூழலின் ‘வெறுப்பு அழுக்கை’ நீக்கும் வகையில் மத நல்லிணக்கத்தை கையிலெடுத்த இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுகள். ’ஹார்ட் டிஸ்க்’ காணாமல் போனது போல திரைக்கதையில் சுவாரஸ்யமும் காணாதது சோகம். கிரிக்கெட் படமா, தேர்த் திருவிழா படமா என்ற குழப்பம், விஷ்ணு விஷால் - விக்ராந்த் மோதலுக்கான காரணம் வலுவில்லாதது, தொடர்ச்சியின்மை படத்தின் சிக்கல்கள். ‘கேமியோ’ என்றால் முக்கால்வாசி படத்தில் இடம்பெறுவது என்ற புது விளக்கம் கொடுத்த படம். ரூ.150 டிக்கெட்டுக்கு ‘அன்பாலனே’ பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் - தேவா நிவர்த்தி செய்தனர். அவர்களுக்கு நன்றி.