காஞ்சிபுரத்தில் பழைய பாதாள சாக்கடை இணைப்புகளை சீரமைப்பது எப்போது?
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் 40 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் கடந்த 1978-ம் ஆண்டு கொடுக்கப்பட்டன. மீதமுள்ள 11 வார்டுகள் ஊராட்சிகளாக இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டவை.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் 40 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் கடந்த 1978-ம் ஆண்டு கொடுக்கப்பட்டன. மீதமுள்ள 11 வார்டுகள் ஊராட்சிகளாக இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டவை. அதனால் அந்தப் பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் இருந்தது. அந்த பகுதிகளில் புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க ரூ.254 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 180.243 கி.மீ தூரத்துக்கு பாதாள சாக்கடைக்கான குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. பிரதான குழாய்கள் மட்டும் 14.101 கி.மீ தூரத்துக்கு செல்கிறது. அடைப்பு ஏற்பட்டால் ஆங்காங்கே சுத்தம் செய்வதற்கு வசதியாக 9 மீட்டர் தூரத்துக்கு ஒன்று என மேல்நோக்கிய ஆளிறங்கும் அளவிலான குழாய்கள் மொத்தம் 7,437 அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 15,652 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.