காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் இரு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நவ.16ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நவ.16-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (புதன்கிழமை) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நேற்று (நவ.11) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, மதியம் 2.30 மணி அளவில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இன்று (நவ.12) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.