பராமரிப்பற்ற நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்: பாதுகாப்பும் இல்லை; அடிப்படை வசதிகளும் இல்லை!
தினசரி இயக்கப்படும் 250-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் 160 புறநகர் ரயில் நிலையங்களை தொட்டுச் செல்கின்றன. இவற்றில் ஒரு நிலையமாக, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பொது போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. மின்சார ரயில் சேவையை பொறுத்தவரை, சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி இயக்கப்படும் 250-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் 160 புறநகர் ரயில் நிலையங்களை தொட்டுச் செல்கின்றன. இவற்றில் ஒரு நிலையமாக, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் முறையாக பராமரிப்பு இன்மை, பாதுகாப்பு குறைபாடு ஆகியவற்றால், பயணிகள் சிரமத்தை சந்திக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. நுங்கம்பாக்கம், சூளைமேடு, எம்எம்டிஏ காலனி உட்பட சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும், லயோலா கல்லூரிக்கு வந்துசெல்லும் மாணவர்களுக்கும் இந்த ரயில் நிலையம் பேருதவியாக இருக்கிறது. இங்கிருந்து மின்சார ரயில்கள் மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயணிக்கின்றனர். இதுதவிர, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்துக்கு மக்கள் வருகின்றனர். இதனால், இந்த ரயில் நிலையம் காலை, மாலை வேளைகளில் பரபரப்பாக காணப்படும். பயணிகள் வருகை அதிகரிப்பால், ரயில்வேக்கு வருவாயும் உயர்ந்து வருகிறது.