தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: உதயநிதிக்கு முதல் வரிசையில் 3-வது இருக்கை ஒதுக்கீடு
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. இக்கூட்டத் தொடரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அவை கூடியதும் மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பேரவையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர் துரைமுருகனை அடுத்து அவர் அமர்ந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். அதன்படி, சட்டப்பேரவை கூட்டம் இன்று (டிச.9) காலை கூடியது.