திரை விமர்சனம்: ஜீப்ரா
வங்கி ஊழியரான சூர்யா (சத்யதேவ்), தன்னுடன் பணியாற்றும் சுவாதியை (பிரியா பவானி சங்கர்) காதலிக்கிறார்.
வங்கி ஊழியரான சூர்யா (சத்யதேவ்), தன்னுடன் பணியாற்றும் சுவாதியை (பிரியா பவானி சங்கர்) காதலிக்கிறார். சுவாதி, தனது ‘டைப்பிங்’ தவறால் பணச்சிக்கலில் மாட்டிக்கொள்ள, வேறொரு கணக்கிலிருந்து பணத்தை மாற்றி அவர் தப்பிக்க உதவுகிறார் சூர்யா. இந்த உதவி, அவரை வேறொரு பிரச்சினையில் இழுத்துவிடுகிறது. பிரபல தொழிலதிபரான ஆதிக்கு (டாலி தனஞ்செயா), நான்கு நாட்களுக்குள் ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது சூர்யாவுக்கு. அது என்ன விவகாரம், அவரால் அதைக் கொடுக்க முடிந்ததா, அதற்காக என்ன ரிஸ்க் எடுக்கிறார்’ என்பது மீதி கதை.
சமீபத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படத்தைப் போலவே பொருளாதார குற்றப் பின்னணியில் சுவாரஸ்யமான த்ரில்லரைத் தந்திருக்கிறார், இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். வங்கித்துறையில் நடக்கும் பணப்பரிவர்த்தனையின் பின்னணியில் எப்படியெல்லாம் அதைக் கையாளலாம் என்கிற மோசடி வித்தைகளை ட்விஸ்ட்களுடனும் படபடப்புடனும் சொல்கிறது, படம். உதவுவதற்காக ஒரு சிக்கல், அதைத் தொடரும் மெகா சிக்கல், அதன் பின்னணியில் தொழிலதிபர்களின் மோதல், பங்கு மார்க்கெட் மோசடி என கொஞ்சம் சீரியஸான கதைதான் என்றாலும் அதை ரசனையாகச் சொன்ன விதத்தில் கவர்கிறார் இயக்குநர்.