புதுச்சேரி: தீபாவளிக்காக ஆதிதிராவிடர், பழங்குடியினரின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைப்பு
தீபாவளியையொட்டி புதுச்சேரியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறை மூலம் இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக 1.27 லட்சம் பேருக்கு தலா ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதை இன்று முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி: தீபாவளியையொட்டி புதுச்சேரியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறை மூலம் இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக 1.27 லட்சம் பேருக்கு தலா ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதை இன்று முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அப்போது, வரும் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை தரப்படும் என்று துறை அமைச்சர் கூறினார்.
புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மூலம் இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தின் கீழ் தீபாவளிக்கு 18 வயது பூர்த்தியடைந்த பழங்குடியினர், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் துணி வாங்க தலா ரூ.1000 வீதம் நிதி உதவி வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 612 பயனாளிகளுக்கு ரூ.12.76 கோடி நிதி உதவி வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியிலுள்ள புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் பயனாளிகள் உள்ளனர். மாஹே பிராந்தியத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இல்லை. இதனால் 3 பிராந்தியகளிலும் இந்த நிதி உதவி ஆனது பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இன்று முதல் வரவு வைக்கப்படும்.