அலகாபாத் ஐகோர்ட் நீதிபதிக்கு எதிரான கடிதம்; அதிமுக கையெழுத்திடாதது ஏன்? - முத்தரசன் கேள்வி
வெறுப்பு குரோத வெறி பிடித்த ஒருவர் நீதிபதியாக நீடிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: “வெறுப்பு குரோத வெறி பிடித்த ஒருவர் நீதிபதியாக நீடிக்கக் கூடாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை நிலைப்பாடுகுறித்தும் இபிஎஸ் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த டிச.8-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்துத்துவா அரசியல் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் சங் பரிவார் கூட்டத்தில் தீவிர அமைப்பு விஸ்வ இந்து பரிஷத். இது 1992 பாபர் மசூதியை இடித்து தகர்ப்பதில் முன்னணி வகித்தது.