ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு - தலைவர்கள் புகழஞ்சலி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு - தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் இன்று காலை 10.12 மணியளவில் பிரிந்தது என்று சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. ஈவிகேஎஸ் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

செல்வப்பெருந்தகை: “தந்தை பெரியாரின் பேரன் என்பதோடு, தமிழக காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத்தின் மகன் என்ற பெருமை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உண்டு. இந்த பாரம்பரியத்தில் வந்த அவர், சமீபத்தில் ஈரோடு கிழக்கு, சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். தமிழக காங்கிரஸ் தொண்டர்களால் தன்மானத் தலைவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் இழப்பு என்பது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழக காங்கிரசின் ஒரு தூண் சாய்ந்து விட்ட உணர்வோடு மிகுந்த வேதனையில் இருக்கிறேன்” என்று பகிர்ந்துள்ளார்.