எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 'காயிலாங்கடை' வாகனங்கள் அணிவகுப்பு
சென்னை சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் அமைந்துள்ள எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. வாகன நிறுத்தும் வசதி இல்லை எனவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் அமைந்துள்ள எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. வாகன நிறுத்தும் வசதி இல்லை எனவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும்போது இருசக்கர வாகனங்களை வெளியே நிறுத்த சொல்கின்றனர். ஆனால், அலுவலக வளாகத்துக்குள் மேற்கூரையுடன் கூடிய வாகன நிறுத்தம் உள்ளது. அதில், காயிலாங்கடைக்கு போக வேண்டிய கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீதி இடத்தில் போலீஸாரின் சாலை தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. பழுதடைந்த கார்களின் அருகில் குப்பைகளையும் கொட்டுகிறார்கள். அதனால் அந்த பகுதி அசுத்தமாக இருப்பதுடன் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து செல்லும் நுழைவுவாயில் பகுதியில்தான் பழுதடைந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இதை அதிகாரிகள் கண்டு கொள்வதேயில்லை. இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.