கோவையில் கொடிநாட்டப் போவது யார்? - முட்டி மோத தயாராகும் முப்பெரும் தலைகள்!
அரசியல் தலைநகரான சென்னையை விட தொழில் நகரமான கோவைதான் இப்போது அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் ஒரே குறியாக இருக்கிறது. காரணம், தொடர்ச்சியாக கோவை, அதிமுகவின் கோட்டையாக இருப்பது தான்.
அரசியல் தலைநகரான சென்னையை விட தொழில் நகரமான கோவைதான் இப்போது அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் ஒரே குறியாக இருக்கிறது. காரணம், தொடர்ச்சியாக கோவை, அதிமுகவின் கோட்டையாக இருப்பது தான். கடந்த 3 சட்டப் பேரவைத் தேர்தல்களில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளை தொடர்ச்சியாக தக்கவைத்து வருகிறது அதிமுக. இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதில் திமுக இம்முறை அதிக முனைப்பு காட்டுகிறது.
அதற்காக கோவைக்கு சிறப்பு கவனமெடுத்து திட்டங்களை அறிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். தான் நினைத்ததை சாதிப்பதற்காக கூடுதல் பலமாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தேர்தல் களப் பணியை ஒப்படைத்திருக்கிறார் ஸ்டாலின். தேர்தல் ‘தந்திர’ வித்தைகளை திறம்படக் கற்ற செந்தில் பாலாஜியின் வியூகங்கள் இம்முறை கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு கணிசமான எம்எல்ஏ-க்களைப் பெற்றுக் கொடுக்கும் என்பது திமுக தலைமையின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்கேற்ப பாலாஜியும் இப்போதே மிக நுணுக்கமாக தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார்.