செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் உபரிநீர் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 24 அடியாக உயர்ந்தது.
காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 4,500 கன அடி உபரிநீரும், பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 16,500 கன அடி உபரநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 24 அடியாக உயர்ந்தது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,453 மில்லியன் கன அடி என்ற நிலையில் ஏரிக்கு விநாடிக்கு 6,498 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. ஏரி முழு கொள்ளவை எட்டும் நிலையில் இருந்ததால் முதல் கட்டமாக 1,000 கன அடி உபரி நீர் காலையில் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நீர் திறப்பின் அளவு 4,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.