நவ.23-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 7 மாவட்டங்களுக்கு நவ.25-ல் கனமழை வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவ.23-ல் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், நவ.25-ம் தேதி தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உண்டு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவ.23-ல் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், நவ.25-ம் தேதி தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உண்டு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 21-ம் தேதி வாக்கில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.