நூல் நயம்: ‘நீலச்சட்டைக் கலைஞர்’ முதல் ‘திரைப் பாடம்’ வரை
மு.கருணாநிதி என்கிற ஓர் ஆளுமை ஆட்சியியல் சட்டகத்திற்கு உட்பட்டு ஆளுங்கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தலித் மக்களின்
மு.கருணாநிதி என்கிற ஓர் ஆளுமை ஆட்சியியல் சட்டகத்திற்கு உட்பட்டு ஆளுங்கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தலித் மக்களின் முன்னேற்றத்திற்காகச் சிந்தித்து, சமத்துவத்தை நிலைநாட்டும் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தும் அதன் எதிர்விளைவுகளைச் சந்தித்தும் வந்துள்ளார் என்பதை இந்நூல் விளக்குகிறது. அடித்தட்டு மக்களின் கல்வி, தொழில், பொருளாதாரம் உயர, குரலாக, செயலாகக் கலைஞர் எவ்வாறு விரைந்து பங்காற்றியுள்ளார் என்பதை ஆழமாக, தெளிவாக, தக்க சான்றுகளுடன் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். நீதிக்கட்சி ஆட்சியில் தொழிலாளர் நலத் துறைக்குள் இருந்த ஹரிஜன நலத் துறையைக் கருணாநிதி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தனித் துறையாக உருவாக்கி, வரலாற்று ஓர்மையுடன் அதற்கு ஆதிதிராவிடர் நலத் துறை என்று பெயர் மாற்றமும் செய்திருக்கிறார்.
நீலச்சட்டைக் கலைஞர் மணிகோ.பன்னீர்செல்வம் அய்யுறு வெளியீடு விலை: ரூ. 250 தொடர்புக்கு: 94440 01479 |
இந்த முன்னெடுப்பிற்குப் பின்னால் அவருக்கு இருக்கிற புரிதலையும் இந்நூல் விளக்குகிறது. இதுவரை உரையாடலுக்கு வராத கருணாநிதியின் தலித்தியப் பார்வை இந்நூலில் நன்கு புலனாகிறது. ஏனெனில், கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னுடைய குரலை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். இந்நூலாசிரியர் கருணாநிதியின் மூலப் படைப்புகளையும் முரசொலிக் கட்டுரைகளையும் ஆராய்ந்து ‘நீலச்சட்டைக் கலைஞர்’ என்பதைத் தத்துவார்த்த நிலையில் விளக்க முற்பட்டிருக்கிறார். நீலம் என்பது வானத்தின் நிறம், இது பரந்த தன்மையைக் காட்டுகிறது என்பது அம்பேத்கரின் பார்வை. இவ்வழியில் கருணாநிதியின் பரந்த தன்மை, எத்தகையது என்பதை இந்த நூல் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. - ஜெ.ராஜா