நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சித்ரவதை: சிசிடிவி காட்சி ஷாக் - விசாரணை தீவிரம்
திருநெல்வேலியில் ‘ஜால்’ நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி: திருநெல்வேலியில் ‘ஜால்’ நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் என்பவர் பிரபல நீட் பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் புதியதாக திருநெல்வேலியை தலைமை இடமாக கொண்டு ‘ஜால்’ நீட் அகாடமி என்ற ஒரு நீட் பயிற்சி மையத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையம் சார்பாக ஆண், பெண்களுக்கு தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.