படைப்பு வேறு, படைப்பாளி வேறா?
மோடியை ஆதரித்து இன்று அவர் அறிக்கை வெளியிட்டதற்கு முந்தைய படிநிலைகளைப் பார்க்க மறுத்தவர்கள் இப்போது அதிர்ச்சி அடைவதற்கு குரூசைப் பொறுப்பாக்க முடியாது.
தென் தமிழக மீனவர்களின் வாழ்வை, வரலாற்றுப் பின்னணியில் ஆராய்ந்து இரண்டு சிறந்த நாவல்களை எழுதியவர் ஜோ டி குரூஸ். இவரது இரண்டாவது நாவலான கொற்கைக்கு சென்ற ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இவரது முதல் நாவலான ஆழி சூழ் உலகு, ஆங்கிலத்தில் நவயானா பதிப்பகம் வாயிலாக வெளிவர இருந்த நிலையில், பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை ஆதரித்து ஜோ டி குரூஸ் கருத்து வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து நவயானா பதிப்பகம் தங்கள் அரசியல் நிலைப்பாடுக்குப் பொருந்தாத சார்பை எழுத்தாளர் எடுத்திருப்பதால் நாவல் வெளியீட்டு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்தது. இந்நாவலை மொழிபெயர்த்த எழுத்தாளர் வ. கீதா ஜோ டி குரூசின் மோடி ஆதரவு வருத்தத்தை அளிப்பதாகக் கூறி தனது மொழிபெயர்ப்பைத் தர மறுத்துள்ளார். படைப்பு வேறு, படைப்பாளி வேறு என்றும், படைப்பிலிருந்து படைப்பாளியைத் தனியாகப் பார்க்க இயலாது எனவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.