மாயாறு வெள்ளத்தில் தெங்குமரஹாடா கிராமம் துண்டிப்பு - பரிசலில் ஆற்றைக் கடந்த கர்ப்பிணி
பவானிசாகரை அடுத்த மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெங்குமரஹாடா மலை கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்ப்பிணி ஒருவரை, பரிசல் மூலமாக மாயாற்றைக் கடக்க வைத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஈரோடு: பவானிசாகரை அடுத்த மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெங்குமரஹாடா மலை கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்ப்பிணி ஒருவரை, பரிசல் மூலமாக மாயாற்றைக் கடக்க வைத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஈரோடு மாவட்ட வனப்பகுதியை ஒட்டி, மாயாற்றின் கரையில் உள்ள தெங்குமரஹாடா மலை கிராமத்தில், 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தைச் சோ்ந்த தெங்குமரஹாடா கிராமத்துக்குச் செல்ல, சத்தியமங்கலம் - பவானிசாகா் வழியாக, 25 கிமீ., தூரம் அடர் வனப்பகுதி வழியாக பயணிக்க வேண்டும். இந்த கிராமத்துக்கு கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என 2 அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இவை, மாயாற்றின் கரையில் நிறுத்தப்படும். ஆற்றில் வெள்ளம் குறைவாக இருக்கும்போது, மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலமும் தெங்குமரஹாடா கிராமத்துக்குச் செல்வர். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பரிசல் மூலம் கிராம மக்கள் ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர்.