ராதிகா நடிக்கும் படத்தை இயக்க சரத்குமார் ஆசை

சரத்குமாரின் 150- வது திரைப்படமாக உருவாகியுள்ளது, ‘தி ஸ்மைல் மேன்’.

ராதிகா நடிக்கும் படத்தை இயக்க சரத்குமார் ஆசை

சரத்குமாரின் 150- வது திரைப்படமாக உருவாகியுள்ளது, ‘தி ஸ்மைல் மேன்’. ஷ்யாம் -பிரவீன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் தயாரித்துள்ளார். ஆனந்த் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படம் வரும் 27 -ம் தேதி வெளியாகிறது.

இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சரத்குமார் பேசும் போது, “இந்தப் படம் 10 ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று சொல்ல மாட்டேன். இது க்ரைம் கதை. இப்போது க்ரைம் த்ரில்லர் கதைகளைப் பார்க்க அதிகமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்தப் படத்துக்கு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம். அதற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். போலீஸ் கதைகளில் நிறைய நடித்துவிட்டேன். இதில் நினைவுகளை மறந்து விடுகிற அதிகாரியாக நடித்திருக்கிறேன். அவரால் ஒரு வழக்கைச் சரியாக முடிக்க முடியுமா, இல்லையா? என்று கதை செல்லும்.எல்லோரும் இந்தப் படம் போர்த்தொழில் மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இதை இயக்குநர்கள் வித்தியாசமாக எடுத்துள்ளனர். நல்ல முயற்சிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.