‘அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது’ - பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு
“அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தும் நாட்கள் கூட குறைந்திருக்கிறது. இதுவே அதிமுகவின் எழுச்சி. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும்”
சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தும் நாட்கள் கூட குறைந்திருக்கிறது. இதுவே அதிமுகவின் எழுச்சி. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும்” என்றார்.
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் கூட்டணி சரியாக அமையவில்லை என்றார்கள். கூட்டணி வரும் போகும். ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது. தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுகதான். கடந்த 2021 ஆம் ஆண்டு வெறும் 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக ஆட்சியில் அமர்ந்தது. தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியது.